கொச்சி: கொரோனா வைரஸ் அபாயத்தால் கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் திரையரங்கங்கள் மூடப்படுகின்றன.

கொரோனா வைரஸ் ஜனவரி முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் மட்டும் தற்போது 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன் எதிரொலியாக, மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தின் எதிரொலியால் கேரளாவில் திரை அரங்கங்கள் வரும் 12ம் தேதி முதல் 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சியாத் கோக்கர்.

அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அடுத்த மறுஆய்வுக் கூட்டத்தை மார்ச் 16 ம் தேதி நடத்தி அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். அதுவரை தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் என்றார்.

கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக அதிகாரி தாடியஸ் கூறுகையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை தனியார் மற்றும் அரசு தியேட்டர்கள் மூடப்படும் என்றார்.