பேராசிரியரை தேச துரோகி என விமர்சித்த ஏபிவிபி அமைப்பினர்……காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்

போபால்:
பேராசிரியரை தேச விரோதி என்று விமர்சித்த பாஜக மாணவர் அமைப்பினர் அவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசம் மன்ட்சார் என்ற இடத்தில் ராஜீவ்காந்தி முதுகலை கல்லூரி உள்ளது. இங்கு தினேஷ் சந்திரகுப்தா என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இக்கல்லூரியில் பி.எஸ்சி., தேர்வு முடிவு வெளியிட தாமதமானது.

இதுதொடர்பாக பாஜக மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தாவை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது வகுப்பறையிலேயே அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று தொடர் கோ‌ஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

கோ‌ஷமிடுவதால் வகுப்புகள் பாதிக்கிறது. அதனால் கோ‌ஷமிட வேண்டாம் என்று பேராசிரியர் கேட்டுக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் பராசிரியரிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது.

பேராசிரியரை தேச துரோகி என்று குற்றம் சாட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர். தொடர் நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி பேராசிரியர் திடீரென மாணவர்களின் காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இதை மாணவர்களே எதிர் பார்க்கவில்லை. பேராசிரியர் தங்கள் காலில் விழுந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால் இந்த காட்சியை யாரோ செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் பரவவிட்டனர். இதன்பிறகு தான் இந்த வி‌ஷயம் வெளி உலகிற்கு தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு பேராசிரியர் விடுமுறையில் சென்றுவிட்டார். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. அதனால் எந்த விசாரணையும் நடக்கவில்லை.

கல்லூரி முதல்வர் ரவீந்திரகுமார் சோகான் கூறுகையில்,‘‘பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தா மூத்த பேராசிரியர் ஆவார். 15-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி உள்ளார். இதய நோய், ரத்த அழுத்த நோயாளி. அவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை’’என்றார்.

ஏபிவிபி மாவட்ட தலைவர் பவான் சர்மா கூறுகையில்,‘‘சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இல்லை. நான் அங்கு சென்றபோது ஆசிரியர்களும், எங்கள் மாணவர்களும் விவாதித்து கொண்டிருந்தனர். நான் உடனே அதில் தலையிட்டு பேராசிரியரிடம் மன்னிப்பு கேட்டேன். அந்த பிரச்சனை அதோடு முடிந்து விட்டது. ஆசிரியர்களுக்கு நாங்கள் மிகுந்த மரியாதை அளிப்பவர்கள்’’என்றார்.

கார்ட்டூன் கேலரி