இரு தினங்கள் தாமதமாக வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் : மத்தியப் பிரதேச தேர்தலில் முறைகேடா?

--

போபால்

தேர்தல் முடிந்து இரு தினங்களுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்தது. அப்போது பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடனடியாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து அறையைப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு பலத்த காவல் இடப்பட்டுள்ளது.

நேற்று போபால் நகரின் குராய் சிடி காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் 34 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து வந்து வைத்துள்ளனர். இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மையத்தில் தனியே வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 34 இயந்திரங்கள் முறைகேடு செய்யப்பட்டதால் தேர்தல் முடிந்து 2 நாட்கள் தாமதமாக எடுத்து வரப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்தியப் பிரதேச தேர்தல் ஆணையர், “தற்போது கொண்டு வரப்பட்டவை அனைத்தும் தேர்தலில் பயன்படுத்தப் படாத மின்னணு இயந்திரங்கள் ஆகும். இந்த மாற்று இயந்திரங்கள் தேர்தல் நேரத்தில் இயந்திரங்கள் பழுதாகும் போது உபயோகப்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தேர்தலில் பயன்படுத்தப் பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு விட்டன.

தற்போது அந்த அறை பூட்டி சீலிடப்பட்டதால் மாற்று இயந்திரங்களை உள்ளே வைக்க இயலவில்லை. ஆகவே தனியே வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் இயந்திரங்களின் வரிசை எண்கள் ஏற்கனவே அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஆகையால் கட்சிகள் இந்த இயந்திரங்களுடன் அவற்றை ஒப்பிட்டு பார்க்கலாம்” என கூறி உள்ளார்.