சிந்தியா ஆதரவு 22 எம்எல்ஏக்களும் நாளைக்குள் தன் முன்பு ஆஜராக வேண்டும்! சபாநாயகர் அதிரடி

போபால்:

மல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியா  ஆதரவாளர்களான, ராஜினாமா  செய்த  22 எம்எல்ஏக்களும் தன் முன்பு வெள்ளிக்கிழமைக்குள் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக, அங்குள்ள இளந்தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கினார். அதையடுத்து, அவரது ஆதரவு 6 அமைச்சர்கள் உள்பட எம்எல்ஏக்கள் 22 பேர் பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், அங்கு கமல்நாத்  தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கிடையில் சிந்தியா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், மார்ச் 16 ஆம் தேதி மத்தியப் பிரதேச சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கமல்நாத் அரசை கவிழ்க்க திட்டமிட்டு, மாநில அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜினாமா செய்த 22 எம்எல்ஏக்களும் நாளைக்குள் (வெள்ளிக்கிழமைக்குள்) தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று சட்டமன்ற சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் ஆதரவாளர் நர்மதா பிரசாத் பிரஜாபதி சபாநாயகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.