’ அழகும், ஆங்கிலமும் மட்டும் அரசியலுக்கு போதாது’’ -அசோக் கெலாட்..
ராஜஸ்தான் மாநில முதல் –அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய அந்த மாநில துணை முதல் –அமைச்சர் சச்சின் பைல்ட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் விலக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அசோக் கெலாட் ‘’ ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து சச்சின் பைலட் செயல்பட்டார்’’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
‘’ நான் நாற்பது ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். புதிய தலைமுறையை நேசிக்கிறேன். நாளைய எதிர்காலம் இளைய தலைமுறை கையில்தான் உள்ளது’’ என்று அவர் குறிப்பிட்டார்.
‘’ அழகாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசுவதும், நேர்த்தியாக இருப்பதும், சுவாரஸ்யமாக ஊடகங்களுக்குப்  பேட்டி அளிப்பதும் மட்டும் அரசியலுக்கு போதுமானது அல்ல’’ என்று தெரிவித்த அசோக் கெலாட்’’ நாட்டை பற்றிய நினைப்பும், சித்தாந்தமும் ஒருவருக்கு இருக்க வேண்டும்’’ என்றார்.
‘’ஊடகங்களில் பணிபுரியும் இளைஞர்கள் நேர்மைக்கும், உண்மைக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-பா.பாரதி.