தலையிட்ட முதல்வர் – மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட நேபாள சகோதரிகள்!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட 2 நேபாள சகோதரிகள், மாநில முதல்வர் கமல்நாத்தின் தலையீட்டால் மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் இரண்டு நேபாள சகோதரிகள் இனரீதியான ஒதுக்குதலுக்கு ஆளானதாகவும், அப்பள்ளியிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விஷயம் தேசிய மீடியாக்களில் முக்கிய இடம் பிடித்தது. ‍இதனையடுத்து மாநில முதல்வரின் கவனத்திற்கும் இப்பிரச்சினை சென்றது. இதனையடுத்து மாவட்ட கல்விதுறை அதிகாரிகளுக்கு, அந்த மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார் முதல்வர் கமல்நாத்.

இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் தனது உத்தரவை திரும்பப் பெற்று, அந்த மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடிவுசெய்து, அதற்கான தகவலையும் சம்பந்தப்பட்ட மாணவிகளின் குடும்பத்திற்கு அனுப்பியது. அந்த மாணவிகளின் தந்தை பள்ளியின் ஆசிரியர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டு பள்ளியின் சார்பாக வைக்கப்பட்டிருந்தது.

தங்களை ‘நேபாளி’ ‘நேபாளி’ என்று அழைத்து இனரீதியாக ஒதுக்கும் நிகழ்வுகள் நடந்ததாக சம்பந்தப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், தாங்கள் மீண்டும் பள்ளியில் சேரவுள்ளது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.