போபால்

பாஜகவின் இந்துத்வா மற்றும் தேசிய வாத பிரசாரம் காங்கிரசுக்கு பின்னடைவு அளித்ததாக மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் ஜெயவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

                                              ஜெயவர்தன் சிங்

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.  அக்கட்சியின் தலைவர் கமல்நாத் முதல்வர் பதவி வகித்து வருகிறார்.   முதல்வருக்கும் அரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜக கடும் சிக்கல்களை உண்டாக்கி வருகிறது.   தற்போதைய மக்களவை தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் 28 இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் கோபால் பார்கவா காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பேரம் பேசி ஆட்சியை கலைக்க முயன்றதாக குற்றசாட்டுகள் உள்ளன.  இந்நிலையில் மபி ஆளுநரிடம் சட்டப்பேரவையில் மாநிலத்தின் பொருளாதாரம் குறித்த விவாதத்தையும் அரசின் மீது நம்பிக்கை வாக்குப்பதிவு நடத்தவும் கோபால் பார்கவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்தும் காங்கிரஸ் தோல்வி குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டது.  அதில் அமைச்சர் ஜெயவர்தன் சிங், “பாஜக கடந்த 5 வருடங்களில் எந்த ஒரு நலத்திட்டமும் செய்ய வில்லை.   ஆயினும் தேசியவாதம், இந்துத்வா போன்ற பிரசாரங்களால் மட்டும் வென்றுள்ளது.

அதே போல பிரசாரம் மூலம் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியுள்ளது.   ஆனால் காங்கிரசின் அனைத்து உறுப்பினர்களும் கமல்நாத் பின்னால் உள்ளனர்.  நமக்கு பெரும்பான்மை இருப்பதால் வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மொத்தம் உள்ள 230 உறுப்பினர்களில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்கள் உள்ளனர்.   இக்கட்சியின் ஆட்சிக்கு இரு பகுஜன் சமாஜ், ஒரு சமாஜ்வாதி மற்றும் நான்கு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.