போபால்

த்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு அதிக வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம் என மாநில பாஜக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

மத்தியப் பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பொதுவாக அளிக்கும் குற்றச்சாட்டில் ஒன்று வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதே ஆகும்.   இது வரை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் வாக்குறுதி அளித்து விட்டு பலமுறை அதை நிறைவேற்றாமல் உள்ளனர்.   இது கடந்த 15 வருடங்களாக தொடர்கிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கடந்த 2017ஆம் வருட நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தில் அளித்த வாக்குறுதிகளில் இதுவரை 24 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.    அடுத்த நிதிநிலை அறிக்கையும் சபையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்பும் அந்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இதை ஒட்டி அரசு தற்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது.  அந்த சுற்றறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு அதிக வாக்குறிதிகள் அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  அத்துடன் தற்போது அமைச்சர்கள் அனைத்துக் கேள்விகளுக்கு கூறி வரும் ஒரே பதில்களை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

1.       இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது

2.       நான் இதை விரைவில் கவனிக்கிறேன்

3.       தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன

4.       நான் இந்த விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்

5.       தங்களின் யோசனை பரிசீலிக்கப்படும்

6.       நான் இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கிறேன்

7.       எனது வருகையின் போது இந்த விவகாரத்தை நேரில் கவனிக்கி
றேன்

8.       விரைவில் இது குறித்த தகவல்கள் சட்டப்பேரவையில் அளிக்கப் படும்

என்பன போன்ற பதில்களை கூற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.   மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சில விவரங்கள் குறித்த கேள்விகள் கேட்கக்கூடாது எனவும் இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த சுற்றறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.   மத்தியப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அஜித் சிங். “இந்த சுற்றறிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது.    பாஜக அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது.”  எனக் கூறி உள்ளார்.