மிசா கைதிகளின் சுதந்திர தின மரியாதை ரத்து : கமல்நாத் அதிரடி

போபால்

மிசா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று அளிக்கப்பட்டு வந்த மரியாதையை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ரத்து செய்துள்ளார்.

அவசர நிலைச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்ட போது  எதிர்க்கட்சியினர் ஏராளமானோர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்குக் கடந்த 2008 ஆம் வருடம் அப்போதைய பாஜக அரசு மாதம் ரூ. 6000 உதவித் தொகை அளிக்க உத்தரவிட்டது. அதன் பிறகு அந்த உதவித் தொகை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இணையாக ரூ. 25000 ஆக உயர்த்தப்பட்டது.

அத்துடன் அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தலைநகர் போபால் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் சுதந்திர தினத்தன்று சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பதவி ஏற்ற கமல்நாத் தாம் பதவி ஏற்ற இரு வாரங்களில் இந்த உதவித் தொகையை நிறுத்தி வைத்தார்.

இந்த உதவித் தொகைக்குச் சிபாரிசு செய்யப்பட்டவர்களில் பலர் உயிருடன் இல்லை என்பதால் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்யச் சோதனைக்கு உத்தரவிட்டார். இந்த சோதனைக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது முதல்வர் கமல் நாத் இந்த வருடச் சுதந்திர தினம் முதல் மிசா கைதிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மரியாதையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் தங்கள் மாவட்ட  தலைமை அலுவலகங்களில் மிசா கைதிகளுக்குச் சிறப்பு மரியாதை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மாநில பாஜக தலைவரும் ஜபல்பூர் மக்களவை உறுபினருமான ராகேஷ் சிங், “இது பழிவாங்கும் அரசியல் ஆகும். வயதானவர்களை மதிப்பதில் கமல்நாத் அரசுக்குப் பிரச்சினை உள்ளது. ஆனால் அவசரநிலை சட்டம் மற்றும் விதி எண் 370 காஷ்மீரில் இருப்பதில் பிரச்சினை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஒஸா, “மிசா கைதி உதவித்  தொகை பெறுபவர்களில் பலர் பாஜகவினராக உள்ளனர். அத்துடன் அவர்களில் பலர் அப்போது சிறைக்குச் செல்லவில்லை. தங்கள் கட்சி ஊழியர்களுக்கு உதவ அப்போதைய பாஜக அரசு இந்த திட்டத்தை நடத்தி உள்ளது. ம பி அரசு சுதந்திர  தினத்தன்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மட்டுமே சிறப்பு மரியாதை செலுத்த எண்ணுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: felicitation stopped, Independence Day, M P govt, Misa detainers
-=-