போபால்:

ச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை கோருகிறது. இன்றைய தினம், அனைத்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தவறாது கலந்துகொண்டு,  கமல்நாத்துக்கு ஆதரவு அளிக்கும்படி சட்டமன்ற கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

மாநில முதல்வர் கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா  இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சிந்தியா ஆதரவாளர்கள் 22 பேர் கடந்த வாரம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். யாரும் எதிர்பாராத வண்ணம் சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதனால், முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனே சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.  மாநில கவர்னரும், பெரும்பான்மை நிரூபிக்க கமல்நாத்துக்கு உத்தரவிட்டார்.

ஆனால், சபாநாயகர், அதை கண்டுகொள்ளாமல் சட்டமன்ற கூட்டத்தை இந்த மாதம் 26ந்தேதிக்கு  தள்ளி வைத்தார். இந்த நிலையில், பாஜக சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 20ம் தேதி (நாளை) மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று கமல்நாத் அரசுமீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா, டாக்டர் கோவிந்த்சிங், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தவறாது சட்டமன்ற நிகழ்வில் கலந்துகொண்டு, கமல்அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.