நான் ‘தலித்’ என்பதால் பாராளுமன்றத்தினுள் பாஜக எம்.பி.யால் தாக்கப்பட்டேன்! ரம்யாஹரிதாஸ் சபாநாயகருக்கு கடிதம்

டெல்லி:

நான் ‘தலித்’ என்பதால் பாராளுமன்றத்தினுள் பாஜக பெண் எம்.பி.யால் தாக்கப்பட்டேன், இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற சபாநாயகருக்கு கேரள காங்கிரஸ் எம்.பி. ரம்யாஹரிதாஸ் எம்.பி. காட்டமாக கடிதம் எழுதி உள்ளார்.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் 2வது அமர்வு இன்று தொடங்கியது.  காலை மக்களவை மற்றும் மற்றும் மாநிலங்களைவை கூடியதும், எதிர்க்கட்சிகள், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமளியின்போது, கேரளாவைச் சேர்ந்த தலித் எம்.பி.யான ரம்யாஹரிதாஸ், தான் சபையினுள்ளேயே பாஜக பெண் எம்.பி. ஜாஸ்கவுர் மீனாவால் தாக்கப்பட்டேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காட்டமாக கடிதம் எழுதி உள்ளார்.

ரம்யாஹரிதாஸ் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், இன்றைய சபை நடவடிக்கையின்போது, பிற்பகல் 3 மணி அளவில், சபையினுள் வைத்து பாஜக பெண் எம்.பி. ஜாஸ்கவுர் மீனா தாக்கினார். நான் தலித் என்பதாலும், பெண் என்பதாலும்  தாக்கப்பட்டேன்.  பாராளுமன்றத்தினுள்  ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நடத்தும் முறை இதுதானா? இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார்.

காங்கிரஸ் பெண் எம்.பி. பாராளுமன்ற மக்களவைக்குள் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரம்யா ஹரிதாஸ். இவரது தந்தை கூலி வேலை செய்துவருகிறார். தாய், டெய்லராக இருக்கிறார். கல்வி மட்டுமல்லாமல், அரசியலிலும் ஆர்வம் காட்டிய ரம்யா, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆலத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டது மட்டுமல்லாமல், வெற்றியும் பெற்று மக்கள் பணியாற்றி வருகிறார்.

 

You may have missed