குழந்தைகள் பலாத்காரத்துக்கு ஆபாச படமே காரணம் : அமைச்சர்  தகவல்

டில்லி

சிறு குழந்தை ஒன்று பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ஆபாசப் படங்களே காரனம் என மத்தியபிரதேச அமைச்சர் கூறி உள்ளார்.

இந்த மாதம் 19ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஒரு சிறு பெண் குழந்தை காணாமல் போனது.    இரு தினங்களுக்குப் பின் அந்தக் குழந்தை ஒரு கட்டிடத்தின் கீழ் தரைப் பகுதியில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டது.   மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிய வந்தது.

அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காமிரா பதிவின் மூலம் ஒரு இளஞர் அந்தக் குழந்தையை கட்டிடத்தின் உள்ளே தோளில் தூக்கிச் செல்வது தெரிய வந்தது.   அந்த இளைஞரை தேடிக் கண்டுபிடித்த காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.   சுமார் 21 வயதாகும் அந்த இளைஞரின் பெயர் சுனில் பீல் என்பது தெரிய வந்தது.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் இன்று டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது இந்த சம்பவம் பற்றி அவரிடம் கேட்டபோது அவர், “இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால் ஆபாசப் படங்கள் இருப்பதாகவே நினைக்கிறேன்.  நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் ஆபாச இணைய தளங்களை தடை செய்ய தயாராக உள்ளோம்.   இதற்கு மத்திய அரசின் உதவியை கோரி உள்ளோம்” என தெரிவித்தார்.