மத்தியப் பிரதேச பாஜக எம் எல் ஏ வின் மற்றொரு சர்ச்சைப் பேச்சு

குணா, மத்தியப் பிரதேசம்

ம. பி. மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினர் பன்னாலால் ஷாகியா அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.  சுமார் 57 வயதாகும் இவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டதற்கு அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அப்போது பன்னாலால், “நமது நாட்டில் ராமர், கிருஷ்ணர், விக்ரமாதித்தன், யுதிஷ்டிரர் போன்ற பலர் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.   இவர்களில்  யாரும் வெளிநாடு சென்று மணம் புரியவில்லை.  ஆனால் இந்தியாவில் பணம் சம்பாதித்த விராட் கோலி அதை இத்தாலியில் திருமணம் செய்து செலவழித்துள்ளார்.   இது அவரது நாட்டுப்பற்றின்மையை காட்டுகிறது” எனக் கூறி அது ஒரு சர்ச்சை ஆனது.

அடுத்ததாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி, “பெண்கள் ஆண்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் துன்பம் உண்டாகும்.  ஆண்களும் மேற்கத்திய கலாசாரப்படி பெண் நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் துன்பம் நேரிடும்” எனக் கூறி அடுத்த ச்ர்ச்சையை கிளபபினார்.

மத்தியப் பிரதேசம் குணா பகுதியில் நடந்த ஒரு பேரணியில் நேற்று கலந்துக் கொண்டார்.  அப்போது ராகுல் காந்தியை தாக்கும் நோக்கத்துடன், “காங்கிரஸ் வறுமையை துறத்துவோம் என கோஷம் எழுப்புகிறது.  ஆனால் வறுமையை ஒழிப்போம் என கோஷம் இட வேண்டும்.   இது தலைவர்களின் தவறாகும்.   இது போல தலைவர்களை பெற்ற பெண்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்.  இதை விட அவர்கள் மலடிகளாக இருந்திருக்கலாம்” எனக் கூறி உள்ளார்.   அது மற்றும் ஒரு சர்ச்சையை எழுப்பி உள்ளது.