மைகர், மத்தியப் பிரதேசம்

சுவைக் கொன்றதாக ஒரு கும்பலால் தாக்கிக் கொல்லப்பட்டவரின் மீதே மத்தியப் பிரதேச காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள மைகர் நகரில் சிராஜ்கான் மற்றும் ஷகீல் ஆகியோர் வசித்து வந்தனர்.   கான் ஒரு தையற்கலைஞர்.  ஷகீல் ஒரு சைக்கிள் ரிப்பேர் கடை வைத்த்துள்ளார்.   பக்கத்து ஊரில் உள்ள ஒருவர் கானுக்கு பணம் தர வேண்டி இருந்தது.  அதை வாங்க அவர் ஷகீலுடன் சென்றுள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்டு அவர் திரும்பி வரும் போது அவர்களை சிலர் வழி மறித்துள்ளனர்.   இருவரும் மாட்டை கொன்று விற்று விட்டு பணம் கொண்டு வருவதாக சந்தேகப்பட்ட அந்த கும்பல் இவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கி உள்ளது.   அடி தாங்காமல் இருவரும் மயங்கி விழுந்த பின் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.

மனைவியுடன் சிராஜ் கான்

அந்த வழியில் சென்றவர்கள் காவல்துறையினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.   காவல்துறையினர் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.   மருத்துவமனையில் கான் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஷகீல் சிகிச்சை பெற்று வருகிறார்.  மரணம் அடைந்த கானுக்கு மனைவியும் 4 குழந்தைகளும், ஒரு சகோதரரும் உள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் கொல்லப்பட்ட இருவரும் பசு மாட்டைக் கொன்றதாக ஒரு வழக்கும்,  அவ்வாறு கொலை செய்ததால் அவர்களை அந்த கும்பல் தாக்கியதாகவும் வழக்கு பதிந்துள்ளனர்.   இதில் கான் இறந்து விட்டதால் ஷகீல் மீது மட்டுமே வழக்கு உள்ளதாகவும் அவர் உடல்நலம் தேறிய உடன் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதற்கு ஆதாரமாக அவர்கள் மாட்டு மாமிசம் எடுத்துச் சென்றதை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மரன அடைந்த சிராஜ் கானின் சகோதரர் இம்ரான் கான், “காவல்துறையினர் எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் தாக்கப் பட்டவர்கள் வைத்திருந்தது பசு மாட்டு மாமிசம் என எவ்வாறு கூறலாம்?   அது காளை மாட்டு மாமிசம் ஆகும்.   அத்துடன் அவர்கள் அதை விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.   இவர்கள் இஸ்லாமியர்கள் என்னும் ஒரே காரணத்தினால் அந்த கும்பல் இவர்களை அடித்து நொறுக்கி உள்ளது.” என கூறி உள்ளார்.

இது குறித்துகாவல்துறை அதிகாரி, “அவர்கள் மாமிசத்துக்காக மாட்டை கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர்.  மேலும் இந்த விவகாரத்தில் சிராஜ் கான் மற்றும் ஷகீலை தாக்கியவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.