டில்லி

பிரதமர் மோடியின்  கனவுத் திட்டமான மாதிரி கிராம திட்டத்தின் கீழ் பல பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்து எடுக்காமல் உள்ளனர்.

பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பின் நடந்த 2014 ஆம் வருட சுதந்திர தின கொண்டாட்டத்தில் “மாதிரி கிராமம்” திட்டத்தை அறிவித்தார்.   அத்துடன் அதே வருடம் அந்த திட்டத்தை அமுலாக்கம் செய்தார்.   அதன் படி ஒவ்வொரு பாரளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு கிராமத்தை மூன்று கட்டமாக தத்து எடுக்க வேண்டும் எனவும்.   அந்த கிராமத்தில் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

பிரதமர் மோடி கிராமப் புற நலனில் அக்கறை காட்டுவதில்லை என எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இது மாற்றாக அமையும் எனவும் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இது செயல்படுவதினால் கிராமங்கள் வளம் பெறும் எனவும் கூறப்பட்டது.    இந்த திட்டம் வரும் 2019ஆம் வருடத்துக்குள் மூன்று கட்டங்களும் முடிவடையும் என எதிர்பார்க்கப் பட்டது.

தற்போது ஒவ்வொரு கட்டத்திலும் கிராமங்களை தத்து எடுக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

மக்கள் அவை உறுப்பினர்களில் முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்காதவர்கள் 43 பேர், இரண்டாம் கட்ட வேலைகளை ஆரம்பிக்காதவர்கள் 207 பேர் மற்றும் மூன்றாம் கட்ட வேலைகளை ஆரம்பிக்காதோர் 416 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் மாநிலங்கள் அவையில் முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்காதோர் 50 பேர் எனவும் இரண்டாம் கட்ட வேலைகளை ஆரம்பிக்காதோர் 125 பேர் எனவும் மூன்றாம் கட்ட வேலைகளை ஆரம்பிக்காதோர் 214 பேர் எனவும் கூறப்படுகிறது.

அதாவது  முதல் கட்டத்தில் அதிகம் பேரால் விரும்பப் பட்ட இந்த திட்டம் சிறிது சிறிதாக விருப்பம் குறைந்து தற்போது பலராலும் விரும்ப்படாத ஒரு திட்டமாக உள்ளது.    இவர்களில் கட்சி வாரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை எனினும்  அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக என்பதால் பாஜக உறுப்பினர்களுக்கும் இதில் விருப்பம் குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.