டில்லி

பி எஸ் என் எல் சேவை மிகவும் மோசமாக உள்ளதால் தனியார் சேவைக்கு மாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று தொலைப்பேசி இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன.  அவற்றில் ஒன்றை பிராட்பாண்ட் சேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வருடத்துக்கு 50000 இலவச அழைப்புக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

உறுப்பினர்களின் பிராட் பாண்ட் சேவைக்கடணமாக அரசு மாதம் ரூ.1500 செலுத்தி வருகிறது.  அத்துடன் வருடத்துக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.1.5 லட்சம் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.

உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் இந்த மூன்று இணைப்புக்களும் அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் ஆகவே உள்ளன.  இந்த இரு நிறுவனங்களின் சேவை மிகவும் மோசமாக உள்ளதாகப் பல உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  அதையொட்டி தங்களுக்கு அளிக்கப்படும் சேவைகளைத் தனியார் சேவையாக மாற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்குக் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அரசை நடத்தும்  நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசு நிறுவனத்துக்கு எதிராகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.   மேலும் அரசு நிறுவனத்தைக் காப்பது உறுப்பினர்களின் கடமை எனவும் கூறி உள்ளனர்.

இந்த எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் உள்குழு இந்த கோரிக்கை குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.