டில்லி:

அமெரிக்காவை சேர்ந்த தர நிர்ணய நிறுவனமான ‘மூடிஸ்’ இந்தியாவின் கடன் தகுதியை 13 ஆண் டுகளுக்கு பின் உயர்த்தியுள்ளது.

இதனால் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் நடவடிக்கைகளை அந்நிறுவனம் பாராட்டியதாக இங்கு பெருமை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தர நிர்ணய முடிவுகளை வெளியிட்ட இந்நிறுவனம் போலியான முடிவுகளை வெளியிட்டு அதற்கு அபராதம் செலுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனம் போலியான தர நிர்ணயத்தை வெளியிட்ட குற்றத்திற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஹாங்காங்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்துள்ளது. இந்நிறுவனத்தில் நேர்மைத்தன்மையான செயல்பாடை சோதனை செய்த பின்னரே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 864 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.550 கோடி) அபராதமாக செலுத்த அந்நிறுவனம் சம்மதம தெரிவித்தது. 2008ம் ஆண்டில் வங்கிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் தொடர்பான தர நிர்ணயத்தில் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அபராதம் செலுத்த அ ந்நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.

அதேபோல் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பா பங்கு சந்தை கண்காணிப்பகம் 1.24 மில்லியன் யூரோவை அபராதமாக விதித்தது. துல்லியமான தர நிர்ணய பட்டியலை வெளியிடாததால் மூடிஸ் நிறுவனத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஹாங்காங் தீர்ப்பாயம் இந்நிறுவனத்தில் நிதி சேவை தொடர்பான குறைபாடுகளுக்கு 1.4 மில்லியன் ஹாங்காங் டாலரை அபராதமாக விதித்தது. பங்கு சந்தையை சீர்குலைக்கும் வகையில் தவறான தர நிர்ணய விபரங்களை வெளியிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் போலித்தனமான முடிவுகளை வெளியிட்ட மூடிஸ் நிறுவனம் தான் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.