இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற ‘திருமதி இலங்கை அழகி’ போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டவரின் கிரீடத்தை முன்னாள் அழகி தட்டிப்பறித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, “திருமதி இலங்கை அழகி” ஆக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 2020 ம் ஆண்டின் திருமதி உலக அழகி பட்டம் வென்ற முன்னாள் அழகி திருமதி கரோலின் ஜுரி மகுடம் சூட்டினார், இவர் 2019 ம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகுடம் சூட்டிய ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மேடையேறிய கரோலின் ஜுரி, “இந்த போட்டி இல்வாழ்க்கையில் உள்ள திருமணம் ஆன பெண்களுக்கு ஆனது என்றும், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, விவாகரத்து பெற்றவர் என்பதால், அதனை திரும்பப்பெறுகிறேன்” என்று அறிவித்தார்.

மேலும், இந்த பட்டத்தை இரண்டாவது சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு வழங்கினார். இந்த சம்பவம், மேடையில் இருந்தவர்களையும், அரங்கில் இருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை சற்றும் எதிர்பாராத புஷ்பிகா டி சில்வா மேடையை விட்டு வெளியேறியதோடு, கரோலின் ஜுரி மீது கொழும்பு – கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் விவாகரத்து பெற்றவர் என்பதற்கான ஆதாரம் இருந்தால் அதனை கரோலின் ஜுரி உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்காக தான் மனம் தளரமாட்டேன் என்று தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட புஷ்பிகாவுக்கு, போட்டி அமைப்பாளர்கள் சார்பில் மீண்டும் திருமதி இலங்கை பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டதோடு, போட்டியாளரை தாக்கும் விதமாக செயல்பட்ட கரோலின் ஜுரியை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின்னர் அவரை ஜாமீனில் அனுப்பிவைத்தனர்.

உரிய விசாரணையின்றி மேடையிலேயே அநாகரீகமாக நடந்துகொண்டது உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து. நடுவர்கள் கூடி முடிவெடுத்த விஷயத்தில், கரோலின் ஜுரி தான்தோன்றி தனமாக செயல்பட்டது வருத்தத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ள போட்டி அமைப்பாளர்கள், இது குறித்து திருமதி அழகி போட்டியின் சர்வதேச சங்கம் உரிய விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டியில், ரோஸி சேனநாயகே, சந்திமால் ஜெயசிங்கே மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ-வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

புஷ்பிகா-வுக்கு கரோலின் ஜுரி பட்டம் சூட்டுவதும், அதனை அவர் மீண்டும் பறிக்கும் சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.