தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் மூன்று டி20 போட்டியில் விளையாடும் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தர்ம்சாலாவிலும், இரண்டாவது போட்டி மொஹாலியில் வரும் செப்டம்பர் 18ம் தேதியும், கடைசி டி20 போட்டி வரும் செப்டம்பர் 22ம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று பி.சி.சி.ஐ தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் அடைப்படையில், இத்தொடரில் விளையாடும் 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க விரும்பாமல், ராணுவத்தில் பணி செய்ய சென்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் ஜாம்பவானாக பார்க்கப்படும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடவில்லை. அதேபோல, ஜஸ்ப்ரித் பும்ராவுக்கும் இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.