ஜார்க்கண்ட் அணியில் விளையாட மறுப்பு தெரிவித்த தோனி – தேர்வுக்குழு ஏமாற்றம்

விஜய் ஹசாரே டிராபில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட தோனி மறுத்ததால் தேசிய தேர்வாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

doni

உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணியின் காலிறுதி போட்டியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி விளையாடுவார் என்று தேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முதன்மை பயிற்சியாளர் ராஜிவ் குமார், ” காலிறுதியில் விளையாட விருப்பம் இல்லை என்று தோனி தெரிவித்துள்ளார். தற்போதைய பேட்டிங் திறனுடன் விளையாடுவது சரியல்ல என்றும், ஜார்க்கண்ட் அணி சிறந்த வீரர்களுடன் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது என்றும் தோனி கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பங்களிப்பு இன்றியே அந்த அணி காலிறுதி வரை சென்றுள்ளது. எனவே அணியின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை “ என்று தோனி கூறியதாக பயிற்சியாளர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டிங்கில் தோனி பெரிதாக சாதிக்கவில்லை. மிக மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். நடப்பாண்டில் வெறும் 22 நாட்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். அதில் 15 ஒருநாள், 7 டி20 போட்டிகள் அடங்கும். விஜய் ஹசாரே டிராபியில் தற்போது 32 புள்ளிகளுடன் லீக் பிரிவில் ஜார்க்கண்ட் அணி முதலிடத்தில் இருக்கிறது.