இந்திய ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீரில் ரோந்து பணிக்கு செல்லும் தோனி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி:

ந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 15 நாட்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து ரோந்து பணிக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரதினம் வரை, காஷ்மீரில், இந்திய ராணுவக் குழுவுடன் இணைந்து தோனி ரோந்து பணிக்கு செல்வதாகவும், இந்த ஆண்டு  நாட்டின் சுதந்திர தினத்தைதோனி ராணுவத்தினருடனே கொண்டாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற  உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து தோனிக்கு எதிராக குரல் எழுந்த நிலையில், ஆகஸ்ட் 3 ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

இதற்கிடையில், பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருந்து வரும், துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய  இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக அறிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் தோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.