மும்பை: தமது பிரிவு உபசார போட்டியின் போது மட்டுமே தோனியை அணியை சேர்த்து கொள்வது பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட்  அணியின் வெற்றிக்கர கேப்டன் என்று வர்ணிக்கப் பட்டவர்களில் முக்கியமானவர் தல தோனி. ஆனால் உலக கோப்பை தொடருக்கு பின்னர் அவருக்கு கட்டம் சரியில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

அந்த தொடருக்கு பிறகு இதுவரை நடைபெற்ற எந்த கிரிக்கெட் போட்டியிலும் தோனி அணியில் சேர்க்கப்படவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன.

அவரது ஓய்வை அறிவிக்க, பிசிசிஐ நெருக்கடி, உடல்தகுதி, இளம்வீரர்களுக்கு வாய்ப்பு என்ற சொல்லாடல்கள் முன் வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் பிசிசிஐயே முன் வந்து, தமது நிலைப்பாடு என்ன என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியது.

அண்மையில் கூட பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற தாதா கங்குலி, தோனியின் ஓய்வு குறித்து கருத்து கூறியிருந்தார். அவர் தெரிவித்ததாவது: இது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எனது நம்பிக்கையை இழக்கவில்லை.

அணியில் இடம்பெறுவதற்காக போராடினேன். அதற்கு பலனாக 4 ஆண்டுகள் அணியில் இருந்தேன். சாதனையாளர்கள் உடனடியாக ஓய்வை விரும்புவது இல்லை என்றார்.

சிறிதுகாலம் ஊடக வெளிச்சத்தில் படாமல் இருந்த தோனி செய்திகள், இப்போது மீண்டும் வலம் வரத் தொடங்கிவிட்டன. இனி எந்த காலத்திலும் இந்திய அணியில் தோனி பிசிசிஐ தேர்வு செய்யப்போவதில்லை.

ஒரேயொரு போட்டியை தவிர. அது தோனி கலந்து கொள்ளும் கடைசி போட்டி (பிரிவுபசார போட்டி). ஓய்வு எப்போது என்று அவர் சொன்னால் அந்த போட்டியில் மட்டும் தோனியை சேர்த்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜார்க்கண்ட்டில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் தோனி. இதையடுத்து ஜார்க்கண்ட யு 23 அணி வீரர்களுடனும் பயிற்சி செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.