சென்னை:

சென்னையில் நடைபெற்ற மெகா பேருந்து பயணச்சீட்டு  சோதனையில் சுமார் 200‘ போலியான மாணவர்கள் உபயோகப்படுத்தும் அரசின் இலவச பேருந்து  பயண அட்டை மற்றும் காலாவதி யான பயணச்சீட்டு  அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அட்டைகளை தயாரித்த ஸ்டூடியோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகஅரசு சார்பில், அரசு பள்ளி  மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், ஏராளமானோர் மாணவர்களின்  இலவச பேருந்து அட்டை மூலம் பயணம் செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சுமார் 300 அதிகாரிகள் கொண்ட குழுவினர், கடந்த 28ந்தேதி சென்னை முழுவதும் திடீர் சோதனை யில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200 பேர் போலி இலவச பஸ் அட்டையை பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலி பயண அட்டையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் பலர், மாணவரின் பாஸைப் பயன்படுத்தி பயணம் செய்வதும் கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்த அபராதம் வலிக்கப்பட்டது.

போலி பேருந்து பயண அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த பயண அட்டைகள் அனைத்தும், கலர் ஜெராக்ஸ் மூலம் தயாரிக்கப்பட் டதும், இந்த முறைகேட்டில் ஒரு புகைப்பட நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அந்த புகைப்படம் நிறுவனம் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.