சேலம்: கொரோனா தொற்று பரவல் சோதனைக்காக  பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள், சாலையிலும், சாலையோரமும் சிதறிக்கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக 2 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் வழியாக செல்லும், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலை யோரங்களில் ஏராளமான கொரோனா சோதனை மாதிரிகள் கிடந்தன. இதை, சுகாதாரப்பணியாளர்கள் தூக்கி வீசியிருக்கலாம் என கருதப்பட்டது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் உடடினயாக சுகாதாரத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் செல்வக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், சிதறி கிடந்த சளி மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது, அதில், நேற்றைய தேதி பதிவிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிதறி கிடந்த அனைத்து மாதிரிகளையும் சேகரித்துடன், அது தொடர்பாக உடடினயாக விசாரணை மேற்கொண்டனர்.

இதில், நேற்று அந்த பகுதியில் 2 இடங்களில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது தெரிய வந்து. தலைவாசல் சுற்றுவட்டாரத்தில், நேற்று கொரோனா பரிசோதனை முகாமில், 87 பேரிடம் எடுக்கப்பட்ட, சளி மாதிரி சேகரிப்பு என தெரியவந்தது.

சேலம் மாவட்டத்தில்  2 இடங்களில் மட்டுமே  கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம்களில் எடுக்கப்படும் கொரோனா மாதிரிகள், பெத்தநாயக்கன் பாளையத்தில் இருந்து ஆத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, முகாமில் எடுக்கப்பட்ட சளி மாதிரிகளை, இரு சக்கர வாகனத்தில் பரிசோதனை முகாம்களுக்கு  எடுத்துச்சென்ற ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக, அந்த மாதிரிகள்  செல்லும் வழியில் ஊழியர்கள் தவறவிட்டது தெரிய வந்தது.  இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட தலைவாசல் தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்

இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்  உறுதி அளித்திருந்தனர்.

 ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டிய கொரோனா மாதிரிகள் கொத்தாம்பாடி சாலையில் சிதறிக்கிடந்தன. இந்த விவகாரம் ஏற்கனவே  சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.