சென்னை:

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய முகிலனை கண்டுபிடிப்பதற்காக, சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 8 வார கால அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.


மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி திபாங்கே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு, முகிலன் காணாமல் போய்விட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

வட இந்தியாவில் முகிலன் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், நீதிபதிகள் எம்எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணை அறிக்கை நிலவரத்தை சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து, முகிலனை தேடிக் கண்டுபிடிக்கும் வகையில், சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 8 வார காலம் நீதிபதிகள் அனுமதியளித்தனர்.