டில்லி:

முத்தலாக்கை தடுக்கும் சட்டம் நிறைவேற்றியதற்கு அரசியல் கட்சியினர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற லோக்சபாவில் முத்தலாக் சட்டம் மசோதா இன்று நிறைவேறியது. முன்னதாக இது தொடர்பாக கட்சியினர் பல விதமான கருத்தக்களை தெரிவித்துள்ளனர். அதன் விபரம்…

மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசுகையில், ‘‘இஸ்லாமிய பெண்க அதிகாலை தாமதமாக எழுந்ததற்காக ராம்பூரில் தலாக் கூறிய செய்தி வந்துள்ளது. இதன் மூலம் அப்பெண்கள் படும் வேதனையை புரிந்துகொள்ள வேண்டும்.

முத்தலாக் நடைமுறையில் இஸ்லாமிய நாடுகள் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தியுள்ளன. மதசார்பற்ற நாடான நாம் அதனை செய்யக்கூடாது. ஷரியத் சட்டத்தில் தலையிடவில்லை. இது பாலின சமநிலை குறித்தது. மதம் கிடையாது’’ என்றார்.

பா.ஜ.க எம்.பி., மீனாட்சி லேகி பேசுகையில், ‘‘ பெண்கள் தான் அதிகளவில் சிறுபான்மையினராக உள்ளனர். அனைவரும் இணைந்து இஸ்லாமிய சட்டத்தை சீர்படுத்த வேண்டும்’’ என்றார். தெலுங்கு தேச எம்.பி., ரவிந்திர பாபு இந்த மசோதாவிற்கு முழு ஆதரவு அளித்து பேசினார்.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், ‘‘இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. அதேசமயம் இதில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிலைக்குழுவில் தான் தீர்க்க முடியும். அனைவரும் அமர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இதை சரி செய்யலாம். இஸ்லாமிய தனி நபர் சட்டத்தில் இந்த மசோதா தலையிடுகிறது’’ என்றார்.

அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பேசுகையில், ‘‘ அந்தந்த மத்ததினர் அவரவர் கோட்பாடுகளை பின்பற்ற அரசியல்சாசனம் அனுமதி வழங்கியுள்ளது. சீர்திருத்தங்கள் குறிப்பிட்ட மதங்களில் இருந்து எழ வேண்டும். சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இச்சட்டம் இஸ்லாமிய பெண்களின் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. ஷரியத் சட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது’’ என்றார்.

பிஜூ ஜனதா தள எம்.பி தகதா சத்பதி பேசுகையில், ‘‘ எப்போதும் சட்டத்தை நிறைவேற்றுவோம். ஆனால், அதனை அமல்படுத்த மறந்துவிடுவோம். இது தவறானது’’ என்றார்.

இதன் பின்னர் முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த மசோதா முன்பே நிறைவேற்றியிருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய பெண்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்’’ என்றார். இந்த மசோதாவில் உள்ள சில பிரிவுகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.