சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரின் நீண்ட கால நண்பரான முகமது பிலால் சித்திக்கிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த  ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது அவர் தனது  கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
நெல்லையில் சிகிச்சை பெற்ற பிறகு சென்னை அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை மூன்று  நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
இந்த நிலையில், சுவாதியுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து, கடைசிவரை நண்பராக இருந்த முகமது பிலால் சித்திக் என்ற இளைஞரிடம் காவல்துறையினர் இன்று திடீரென விசாரணை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாதி கொலை நடந்த  ஒரு சில நாட்களிலேயே, இந்த வழக்கில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்புள்ளதாக வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி பரவியது. இதை  ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் தங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்தனர்.   இதனால் கண்டனங்கள் எழவே ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட பலரும் அந்த பதிவை நீக்கினர்.
இந்த நிலையில், சுவாதிக்கு முகமது பிலால் சித்திக் என்ற நண்பர் இருப்பது பிறகுதான் காவல்துறையினர்  மூலம் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. ஆனால் அவரது பெயரையொட்டி ஒரு புரளி முன்கூட்டியே பரவியது எப்படி என்பது மர்மமாகவே இருக்கிறது.
aa
இந்த நிலையில்தான், பிலால் சித்திக்கிடம் இன்று நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்ததை தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு பிலால் சித்திக் சென்றார்.
பிலால் ஏற்கனவே மீடியாக்களிடம் பேட்டியளித்து பிரபலமாகியுள்ளார். எனவே தனது முகத்தை வெளிக்காட்டாமல் ஹெல்மெட் அணிந்தபடியே காவல் நிலையத்திற்குள் அவர் சென்றார்.
ராம்குமார் மட்டுமே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் இல்லை என்று அவரது வக்கீல் ராமராஜ் கூறிவரும் நிலையில் சுவாதி நண்பர் பிலால் சித்திக்கிடம் விசாரணை நடைபெற்றுவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவர் கொடுத்த ஏதோ ஒரு முக்கிய, தகவலை அடுத்துதான்,  பிலால் சித்திக்கிடம் காவல்துறை  விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. விசாரணையில் பிலாலுக்கும் அந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக காவல் துறைகருதினால் அவர் கைது செய்யப்படலாம்.
இந்த விசாரணை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தி்ல நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாரையும், பிலால் சித்திக்கையும் உட்கார வைத்து நேருக்கு நேர் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.