உலகின் மிகப் பெரிய  10 செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து கீழிறங்கிய முகேஷ் அம்பானி

டில்லி

ந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி உலகின் 10 மிகப் பெரிய  செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து கீழிறங்கி உள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பில் இருந்து சில்லறை வர்த்தகம், தொலைத் தொடர்பு எனப் பல இடங்களில் கால் பதித்துள்ளது.   இதன் உரிமையாளரான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தராக உள்ளார்.   இவர் தனது முதலீட்டாளருக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வரை லாபம் ஈட்டி தந்துள்ளார்.  கடந்த 25 வருடங்களாக இந்த நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் உலகின் மிகப் பெரிய 10 செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம் பெற்றிருந்தார்.  ஆனால்  கடந்த இரு மாதங்களாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு குறைந்து வந்தது.   ஒரு பங்கின் மதிப்பு ரூ.2,369.35 ஆக இருந்த நிலையில் இதன் மதிப்பு சிறிது சிறிதாக குறைந்து ரூ.1,994.15 ஆகியது.  எனவே முகேஷ் அம்பானி தற்போது உலக செல்வந்தர்கள் வரிசையில் 11 ஆவதாக உள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த வருட தொடக்கத்தில் ரூ.6.62 லட்சம் கோடி ஆக இருந்தது.  அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.5.63  லட்சம் கோடி ஆகி உள்ளது. ஆரக்கிள் நிறுவன அதிபர் லாரி எல்லிசன் மற்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் ஆகியோர் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியை விட அதிகமாகி உள்ளதால் அவர்கள் இருவரும் 9 மற்றும் 10 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளனர்.