ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மீது கண் வைக்கும் அம்பானி
டில்லி
ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை வாங்க முகேஷ் அம்பானி விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் புகழ்பெற்ற தொழில் நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஸ்டிரீஸ் ஆகும். இந்த நிறுவனம் அம்பானி சகோதரர்களில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானதாகும். ரிலையன்ஸ் குழுமம் முதலில் ஜவுளி தொழிலில் இறங்கி பல துறைகளில் கால் பதித்துள்ளது. அவற்றில் பல தொழில்கள் முதல் இடத்தில் உள்ளன.
அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தற்போது மிகவும் கடனில் தத்தளித்து வருகிறது. இதனால் பெருத்த நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் அரசு வசம் உள்ள பங்குகளை விற்க நிறுவனம் முயன்று வந்தது. ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதற்கு அதிக அளவில் கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி இதன் பங்குகளை விற்று நிறுவனத்தை மற்றொரு நிர்வாகத்தின் கீழ் நடத்த முடிவு செய்தது. ஆனால் பங்குகளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தினசரி செலவுகளை சமாளிக்க முடியாத ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி விட்டது.
பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு ரிலையன்ஸ் அதிகாரி, “ரிலையன்ஸ் நிறுவன அதிபரான முகேஷ் அம்பானிக்கு வெகு நாட்களாக விமான சேவையில் நேரடியாக இறங்க விருப்பம் உள்ளது. எனவே அவர் இந்த ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா பங்குகளை வாங்கி தனது நிறுவனம் மூலம் நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.