மும்பை:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கிறார். கொரோனா ஊரடங்கால் பல நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் அம்பானி ஒருபுறம் கோடிக் கணக்கில் முதலீடுகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். பங்குச் சந்தையிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது. இதன் விளைவாக, உலக பணக்காரர்களுக்கான பட்டியலில் முகேஷ் அம்பானி பெரும் ஏற்றம் கண்டுள்ளார்.

தற்போது அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 326 மில்லியன் டாலர் அதிகரித்து 80.2 பில்லியன் டாலராக உள்ளது, அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6.04 லட்சம் கோடிகள். எல்.வி.எம்.ஹெச் தலைவரான அர்னால்ட்டின் நிகர மதிப்பு 1.24 பில்லியன் டாலர் குறைந்து 80.2 பில்லியன் டாலராக (ரூ. 60.01 லட்சம் கோடி) குறைந்ததால் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 187 பில்லியன் டாலருடன் முதலிடத்திலும், மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் 121 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 102 பில்லியன் டாலர் சொத்துடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் அர்னால்டை முந்தி 4வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி.