டில்லி

லகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில்  வாரன் பஃபட்டை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 8  ம் இடத்துக்கு வந்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இடம் பிடித்தார்.   இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் மட்டுமின்றி ஆசியாவில் முதல் முதலாக இந்த பட்டியலில் இடம் பிடித்தவரும் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் முகேஷ் அம்பானியும் 8 ஆம் இடத்தில் அமெரிக்கரான பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் அதிபர் வாரன் பஃபட் ஆகியோரும் இருந்தனர்.    வாரன் பஃபட் தனது சொத்தில் இருந்து 290 கோடி டாலர் அளவுக்குத் தர்மத்துக்கு அளித்துள்ளார்.   இதையொட்டி தற்போது அவருடைய சொத்து மதிப்பு 6790 கோடி டாலராக ஆகி உள்ளது.

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து 6830 கோடி டாலராக உள்ளதால் தற்போது 8 ஆம் இடத்தை அம்பானி பிடித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து பங்குகளின் மதிப்பும் குறைந்த நிலையில் ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு 21.63% உயர்ந்தன.   இதற்கு முக்கிய காரணம் முகநூல், ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்ட பல நிறுவனங்களின் முதலீடுகள் ஆகும்.

வரும் 2021 ஆம் வருடம் மார்ச் மாதம் ரிலயன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனம் ஆகும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அதற்கு முன்பே ரிலையன்ஸ் நிறுவனம் அனைத்து கடன்களையும் செலுத்தி உள்ளது.