திருப்பதி

காவல் துறையிடம் பிடிபட்ட சமூக ஆர்வலர் முகிலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினர் கூறி உள்ளனர்.

சுற்றுச் சூழல் ஆர்வலரான முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரை தேடி கண்டுபிடிக்க ஆட்கொண்ர்வு மனு அளிக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணை செய்துவரும் இந்த வழக்கில் முகிலனை விரைவில் கண்டுபிடிப்போம் என நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.

நேற்று முகிலனை கைது செய்த திருப்பதி ரெயில்வே காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியது. முகிலனை கைது செய்த திருப்பதி ரெயில்வே காவல் ஆய்வாளர் சாத்தையா செய்தியாளர்களிடம், “நேற்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதி வந்த ரெயிலில் தாடியுடன் உள்ள ஒரு நபர் அநாகரீகமாக நடப்பதாக புகார் வந்தது. அதை ஒட்டி அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.

காவல்துறையை பார்த்ததும் ஆவேசம் அடைந்த முகிலன் மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும், கூடங்குளம் அணு மின் நிலைய திட்டம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைகளை எதிர்த்தும் தமிழில் கோஷமிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ரெயில்வே காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர். அவர் நாங்கள் கொடுத்த மதிய உணவை சாப்பிட்டார்.

முகிலன் தனது ஊர் காட்பாடி என கூறியதால் அவரை அங்கு அனுப்ப முடிவு செய்தோம். திருப்பதி ரெயில்வே நிலையத்தில் இருப்பவர் முகிலன் என்னும் சந்தேகத்தில் தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் அவர் புகைபடஙக்ளை அனுப்பி வைத்தனர். இதன் மூலம் நாங்கள் முகிலனை பிடித்து வைத்துள்ளதை உறுதி செய்தோம். தமிழக சிபிசிஐடி காவல்துறை வேண்டுகோளுக்கிணங்க அவரை காட்பாடிக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.