திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைந்ததால் பாதிப்பில்லை : பொதுப்பணித்துறை

திருச்சி

முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் உடைந்ததால் பாதிப்பு எதுவும் இல்லை என பொதுப்பணித்துறை முதன்மை செயலர்  தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு என்னும் இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் பிரிந்து பாய்கிறது.   இங்குள்ள மேலணையின் தெற்கு பிரிவு கடந்த 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.    இந்த மேலணையில் 45 மதகுகள் மற்றும் தூண்கள் உள்ளன.   இதன் மீது ஓரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

நேர்று இரவு சுமார் 8 மணிக்கு இந்த மேலணையில் 6 ஆம் மதகிலிருந்து 13 ஆம் மதகு வரையிலான 8 மதகுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.   அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.   உடைந்த பகுதிகளை நேற்று மாவட்ட ஆட்சியர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இன்று காலை பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ் கே பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.    ஆய்வுக்கு பின் பிரபாகர், “திருச்சி முக்கோம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளது.   இதனால் எந்த பாதிப்பும் கிடையாது.   இந்த மதகுகள் உடைந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.   அத்துடன் இந்த உடைப்பை சீரமைக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.