பகுஜன் சமாஜ் கட்சி – சமாஜ்வாதி கட்சி கூட்டணிக்கு முலாயம் சிங் அதிருப்தி

க்னோ

குஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்ததற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.   இன்று அந்தக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

அகிலேஷ் யாதவின் தந்தையும் சமாஜ் வாதி கட்சியின் அமைப்பாளருமான முலாயம் சிங் யாதவ் இந்த கூட்டணிக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.  அவர் இன்று செய்தியாளர்களிடம், ”அகிலேஷ் யாதவ் மாயாவதியுடன்  கூட்டணி வைத்துள்ளார்.   அதாவது நம்மை சேர்ந்தவர்களே நமது கட்சியை அழிக்கின்றனர்.” என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “முன்பு கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.  இப்போது அது மிகவும் குறைந்துள்ளது.   முன்பு நமது கட்சியில் 40 க்கும் மேற்பட்ட பெண் தலைவர்கள் இருந்தனர்.  இப்போது 10 பேர் கூட இல்லை.

நமது ஒரே நோக்கம் பாஜகவை வீழ்த்துவது தான் என்பதில் நானும் ஒப்புக் கொள்கிறேன்.

நான் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.  உங்களுக்கு கட்சியின் செயல்பாடு குறித்து ஏதும் வருத்தம் இருந்தால் அதை எனக்கு கடிதம் மூலம் தெரிவியுங்கள்.

நீங்கள் அதை உங்கள் பெயர் குறிப்பிடாமல் மொட்டைக் கடிதமாக கூட எழுதி அனுப்பலாம்,   நான் அந்த கடிதத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.