காஜியாபாத்

ராமரை வட இந்தியர்கள் மட்டுமே வணங்குவதாகவும் கிருஷ்ணரை இந்தியா முழுவதும் வணங்குவதாகவும் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவின் மகனும் முன்னாள் உ பி முதல்வருமான அகிலேஷ் யாதவ் சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரம்மாண்டமான கிருஷ்ணரின் சிலையை அமைக்கப் போவதாக தெரிவித்தார்.  இது அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  இது குறித்து அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

காஜியாபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர், “ராமரை நாம் வணங்குவது உண்மைதான்.   அனைத்து வட இந்தியர்களும் ராமரை வணங்குகிறார்கள்.  ஆனால் வடக்கோ தெற்கோ இந்தியா முழுவதும் வணங்கப்படும் கடவுள் கிருஷ்ணர் என்பதை யாரும் மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.   அகிலேஷ் யாதவ் கிருஷ்ணர் சிலை திறப்பதற்கு முலாயம் சிங் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ், பா ஜ க ஆகிய கட்சிகளும் கூறியதால் இதை தெரிவிப்பதாக அவர் கூறி உள்ளார்.