‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ்.

தனது கட்சியின் சார்பில் மக்களவைக்கு போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அவர் வெளியிட்டார்.அதில் 4 பேர் அகிலேஷ் குடும்பத்து ஆட்கள்.

முதல் நபர்- முலாயம் சிங் யாதவ்.அகிலேஷின் அப்பா. அவர் வழக்கமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை கொள்கையாக வைத்துள்ளார்.

கடந்த தேர்தலில் முலாயம் சிங் – மெயின்புரி, அசம்கார் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டி யிட்டு- இரு இடங்களிலும் வென்றார்.

அசம்கார் தொகுதியில் வெறும் 63 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் ஜெயிக்க முடிந்தது. ஆனால் மெயின்புரி தொகுதியில் 3 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

எனவே அப்பாவுக்கு இந்த முறை மெயின்புரி தொகுதியை கொடுத்துள்ளார்- அகிலேஷ்.இதற்கு முன்பு முலாயம்சிங் ,இந்த தொகுதியில் நான்கு முறை ஜெயித்துள்ளார்.இந்த தொகுதி-சமாஜ்வாதி கட்சியின் கோட்டை.12 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் முலாயம் சிங்கின் –யாதவ் ஓட்டுகள் 35% உள்ளது.

குடும்பத்தின் அடுத்த வேட்பாளர்-டிம்பிள்.அகிலேஷ் யாதவின் மனைவி.அவருக்கு கன்னாஜ் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக இருந்தது. அவரே சில தினங்களுக்கு முன்பு இதனை தெரிவித்திருந்தார்.

திடீர் என்று மனைவியை நிறுத்தியுள்ளார் .கன்னாஜ் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு போட்டியிட்டு ஜெயித்தார்- அகிலேஷ். பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றதால் முதல்வர் ஆனார். அப்போது கன்னாஜ் தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததால் –அங்கு போட்டியிட்டு வென்றவர்- டிம்பிள்.

முலாயம் சிங் ரத்த சொந்தங்களான  –தர்மேந்திரா (படான் ), அக்ஷ்ய் (பெரோசாபாத்) ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், சிட்டிங் எம்.பி.க்கள்.

முலாயம் சிங் குடும்பத்தில் விடுபட்ட ஒரு நபர்- தேஜ் பிரதாப் யாதவ். முலாயம் சிங் யாதவின் பேரன். லாலு பிரசாத் யாதவின் மருமகன். மெயின்புரி தொகுதியின் சிட்டிங் எம்.பி.

கடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் வென்ற முலாயம்-  அசம்கார் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு- மெயின்புரி எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததால்- அந்ததொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3 லட்சம் ஒட்டுகள் வித்தியாசத்தில்  வென்றவர்- தேஜ் பிரதாப்.

.அந்த தொகுதி இப்போது முலாயம் சிங்குக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த பட்டியலில்- தேஜ் பிரதாப் பெயர் இடம் பெறலாம்.

–பாப்பாங்குளம் பாரதி