முல்லை பெரியாறு நீர்மட்டம்: ஆகஸ்டு 31ந்தேதி வரை 139 அடியாக வைத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இந்த மாதம் 31-ம் தேதி வரை 139 அடியாக வைத்திருக்குமாறு உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத பேய்மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், அனைத்து அணைகளும் நிரம்பிய தால், அதில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் காரணமாக கேரளா மாநிலம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது.

இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையின்போது, மத்திய நீர்வளத்துறை ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில்,  கேரளாவில் வெள்ளம் ஏற்பட முல்லை பெரியாறு அணையில் அதிக அளவு நீர் தேக்கி வைத்ததும் ஒரு காரணம் என கேரள அரசு குற்றம் சாட்டியது. முல்லை பெரியாறில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால்தான்  இடுக்கி அணை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக  குற்றம் சாட்டி கேரள அரசு சார்பில் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற்றது.  தமிழக அரசு சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனு வில்,   கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு ஆகஸ்ட் 16-ம் தேதி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால் வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் அல்ல என்றும் வாதிட்டது.

அதைத்தொடர்ந்த மத்திய நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு 139.9 அடிவரை நீர் தேக்கி வைக்கை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. அப்போது,  மக்களின் பாதுகாப்பை தான் நாங்கள் முக்கியமாக கருதுகிறோம் என்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீர் இருப்பை 139 அடி ஆக வைத்திருக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் இந்த வழக்கு செப்டம்பர் 6-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.