அமெரிக்காவில் வீடு புகுந்து பலரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்…!

வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிகான் மாகாணத்தில் உள்ள சேலம் என்ற பகுதியில் உள்ள வீட்டில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பணயக்கைதிகளாக பலரை பிடித்து வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சந்தேக நபருடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்காக ஒரு நபரை போலீசார் உடன் அழைத்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமுற்ற மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக போலீசார் கூறினர்.

பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. 3 முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பெரும் இரைச்சல் கேட்டதாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.

என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவருடன் சேர்த்து, மொத்தம் 3 பேர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சம்பவத்தை பார்த்த மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.