ஊரடங்கில் 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 29 அன்று வெளியிட்டது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களுக்கு தடை தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திரையரங்குகளை விரைந்து திறக்குமாறு இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் :=

”நாடு முழுவதுமுள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் நேரடியாக 2 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தவிர்த்து பல லட்சம் பேர் மறைமுகப் பணியாளர்களாக உள்ளனர். இந்தச் சூழலில் கடந்த ஆறு மாத காலமாக 10,000க்கும் அதிகமான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் எங்களுக்கு சுமார் 9,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பொழுதுபோக்குத் தளமாக சினிமா மட்டுமே உள்ளது. விரைந்து திரையரங்குகளை அரசு திறக்கவில்லையெனில் பொருளாதார ரீதியான இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி வேலை இழப்புகளும் அதிகரிக்கும்.

கொரோனா ஊரடங்கால் சினிமா துறையில் சாதகமான சூழல் இல்லை. முதலில் மூடப்பட்ட துறையாகவும், கடைசியாகத் திறக்கப்படும் துறையாகவும் சினிமா துறை உள்ளது.

சீனா, கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 84 நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன. அதே போல இந்தியாவிலும் திரையரங்குகளை விரைந்து திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்”.

இவ்வாறு இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இத்துடன் #UnlockCinemaSaveJobs என்ற ஹேஷ்டேகும் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.