மும்பை:

மும்பை – அகமதாபாத் மார்கத்திலான ரெயில் போக்குவரத்து மூலம் ரூ.29 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த 30 மாதங்களாக இந்த மார்கத்திலான ரெயில்களில் 40 சதவீத இரு க்கைகள் காலியாக சென்று வந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ரூ. 88 ஆயிரம் கோடி கடன் மூலம் இந்த திட்டத்தை ஜப்பான் செயல்படுத்தவுள்ளது. இந்த கடனுக்கு 0.1 சதவீதம் வட்டியாகும். இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேற்கு ரெயில்வே துறையிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் மும்பை -அகமதாபாத் மார்கத்திலான புல்லட் ரெயில் திட்டம் லாபகரமானது கிடையாது என்பது தெரியவந்துள்ளது. இந்த மார்கத்தில் இயக்கப்படும் 32 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ரூ. 14 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், 31 ரெயில்கள் மூலம் ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அந்த பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மூலம் இந்த மார்கத்தில் பயணிகள் பெரும்பாலும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தான் பயணம் செய்துள்ளனர். 40 சதவீத இருக்கைகள் காலியாக சென்று வந்துள்ளது. உயர் பிரிவு பெட்டிகள் காலியாக தான் சென்று வருவது தெரியவந்துள்ளது. இது போன்ற காரணங்களால் தான் புல்லட் ரெயில் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முன்னதாக கடந்த ஆண்டு அகமதாபாத் ஐஐஎம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் புல்லட் ரெயில் திட்டம் லாபகரமாக செயல்பட வேண்டும் என்றால் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பயணிகளை கையாள வேண்டும். அல்லது நாள் ஒன்றுக்கு 100 முறை ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 300 கி.மீ பயணத்திற்கு ஒரு பயணிக்கு ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.