கோவிஷீல்டு தடுப்பூசிகள் வினியோகத்தில் முக்கிய பங்காற்றும் மும்பை விமான நிலையம்…!

மும்பை: சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மும்பை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நாட்டின் 2வது மிகப் பெரிய விமான நிலையம் மும்பை விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இது குறித்து மும்பை விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி ராஜிவ் ஜெயின் கூறி உள்ளதாவது:

நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்படுகிறது. மும்பை விமான நிலையத்துக்கு நாள்தோறும் சீரம் நிறுவனத்தின் 25 டன் தடுப்பூசிகள் வரும். இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைவு என்பதால் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். சரக்கு முனையத்தில் இருந்து தடுப்பூசிகள் 25 நிமிடங்களுக்குள் விமான நிலையத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

நாள் ஒன்றுக்கு 200 டன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தடுப்பூசிகளை சேமிப்பதற்கான குளிர்சாதன வசதிகளும் இருக்கின்றன என்றார்.

மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகளை மேற்பார்வையிட பிரத்யேக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை விமான நிலையத்தை தவிர ஐதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமும் தடுப்பூசி வினியோகத்தில் முக்கிய பங்கை வகிக்கும் என்று தெரிகிறது.