சிறிய இலக்குதான் – ஆனால் பெரிதாக அடித்து துவைத்த மும்பை அணி!

ஷார்ஜா: சென்னைக்கு எதிராக இன்று நடைபெற்ற 41வது ஐபிஎல் போட்டியில், சென்னையை ஜஸ்ட் லைக் தட் என்ற வகையில், ஊதித்தள்ளி விட்டது மும்பை அணி.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது மும்பை அணி. அதன்படி களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கூடுதலாக மும்பை அணி விட்டுக்கொடுத்த ரன்கள் 12 என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், களமிறங்கிய மும்பை அணிக்கு பெரிய வேலையெல்லாம் இருக்கவில்லை. அதேசமயம், நிதானமாக ஆடும் எண்ணமும் அந்த அணிக்கு இருக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய இருவர், சட்டுபுட்டென வேலையை முடித்து கிளம்பிவிட்டனர்.

குவின்டன் டி காக் 37 பந்துகளை சந்தித்து 46 ரன்களை அடித்தார். இதில், 2 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகள் அடக்கம். மற்றொரு துவக்க வீரர் இஷாக் கிஷான் 39 பந்துகளை சந்தித்து 68 ரன்களை சாத்தி விட்டார். இதில் 5 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகள் அடக்கம்.

முடிவில், 12.2 ஓவர்களிலேயே, எந்த விக்கெட்டையும் பறிகொடுக்காமல் 116 ரன்களை அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்‍பை அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது மும்பை அணி.