வீட்டை அனுமதி இல்லாமல் ஓட்டலாக மாற்றியதாக சோனு சூட் மீது போலீசில் புகார்…

 

ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து, ‘தர்மபிரபு’ என்று பெயர் வாங்கிய இந்தி நடிகர் சோனு சூட், புதிய சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார்.

மும்பையின் ஜுகு பகுதியில் அவருக்கு சொந்தமாக 6 மாடி குடியிருப்பு உள்ளது.

இதனை உரிய அனுமதி பெறாமல், சோனு சூட் ஓட்டலாக மாற்றி விட்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி சார்பில், ஜுகு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சோனு சூட் மறுத்துள்ளார்.

“வீட்டை ஓட்டலாக மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் நான் அனுமதி பெற்றுள்ளேன்” என குறிப்பிட்டுள்ள சோனு சூட், “மகாராஷ்டிர கடற்கரை மண்டல ஆணையத்தின் அனுமதியை மட்டுமே நான் பெற வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

“கொரோனா காரணமாக கடற்கரை ஆணையத்தின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, நான் விதிகளை மீற வில்லை” என சோனு சூட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் என்ன சொல்கிறார்கள்?

“சோனு சூட் மீதான புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருகிறது. அவர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜுகு போலீசார் தெரிவித்துள்ளனர்.

– பா. பாரதி