மும்பை

மும்பையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்க 130 வீடுகள் கொண்ட 19 மாடிக் கட்டிடத்தை ஒரு கட்டுமான அதிபர் அளித்துள்ளார்.

இந்திய அளவில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.   குறிப்பாக மும்பை மாநகராட்சி அதிக அளவில் பாதிப்படைந்த மாநகராட்சியாக உள்ளது.  மும்பையில் இதுவரை 65300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது சுமார் 28900 பேர் கொரோனா பாதிப்பில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மும்பையில் வசிப்போர் பலரும் பாதிக்கப் பட்டோருக்கு உதவ முன்வந்துள்ளனர்.   வடக்கு மும்பையில் உள்ள மலாட் பகுதியில் எஸ் வி சாலையில் ஒரு புதிய 19 மாடிக் கட்டிடம் குடி புகத் தயார் என மாநகராட்சியின் சான்றிதழ் பெற்றுள்ளது.   இங்கு 130 குடியிருப்புக்கள் உள்ளன.  இதை ஷீஜி சரண் என்னும் நிறுவனம் கட்டி முடித்துள்ளது.

இந்த கட்டிட உரிமையாளர் மெகுல் சங்வி இந்த கட்டிடத்தை  கொரோனா நோயாளிகளைத் தங்க வைக்க அளித்துள்ளார்.   இதற்கு அவர் இந்த பகுதி மக்களிடம் ஒப்புதல் பெற்றுள்ளார்.   இந்த கட்டிடம் தற்போது கொரோனா நோயாளிகள் தங்கும் தனிமை மையமாகி உள்ளது.  இதுவரை இந்த கட்டிடத்தில் குடியிருப்புக்கு 4 பேர் வீதம் 300 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மலாட் பகுதியில் வசிக்கும் வடக்கு மும்பை தொகுதி மக்களவை உறுப்பினர் கோபால் ஷெட்டி முயற்சி செய்து கட்டிடத்தை பெற்றுள்ளார்.   இந்த பகுதியில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் அவர் மெகுல் சங்வியுடன் பேசி இந்த கட்டிடத்தை தனிமை மையமாக்க ஒப்புதல் பெற்றுள்ளார்.   மேலும் இந்த கடுமையான நேரத்தில் மக்களுக்கு உதவ ஒப்புதல் அளித்த சங்விக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.