மும்பை: தடைசெய்யப்பட்ட மது நடன அரங்கில் பிடிபட்ட 47 குற்றவாளிகளுக்கும், வித்தியாசமான முறையில் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது மும்பை மாநகர நீதிமன்றம்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; மும்பை ஹாஜி அலி தர்காவின் அருகேயுள்ள இண்டியானா ரெஸ்டாரன்ட் மற்றும் பாரில், காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கே 8 பெண்கள் ஆபாச நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் மீது, பார்வையாளர்கள் பணத்தை வீசி ரசித்துக் கொண்டிருந்தனர். அந்த மது அரங்கிற்கான உரிமம் கடந்தாண்டே ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தடையை மீறி இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தது.

காவல்துறை சோதனையின்போது கைதுசெய்யப்பட்ட 47 பேரும், மும்பை மாநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தீர்ப்பளித்த நீதிபதி, “குற்றவாளிகள் அனைவரும் பத்லாபூரிலுள்ள சத்கர்மா பாலக் ஆஸ்ரமத்திற்கு தலா ரூ.3000 நன்கொடை அளித்தால்தான் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார்.

இதன்படி, 47 பேருக்கும் சேர்த்து மொத்த தொகையாக ரூ.1.41 லட்சம் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி