மும்பை

கொரோனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகரை விட மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.   அதன்பிறகு அந்நகரில் அதிக அளவில் பாதிப்பு உண்டாக்கிய கொரோனா சீனாவில் பரவி தற்போது உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.  இதனால் மக்கள் வுகான் நகரை கொரோனாவின் ஊற்றுககண் எனக் குறிப்பிட்டனர்.

சீனாவில் மொத்தம் 84000 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது.  இதில் வுகான் நகரில் மொத்தம் 50,333 பேர் பாதிப்பு அடைந்தனர்.  இவர்களில் 3869 பேர் உயிர் இழந்தனர்.  தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இது வரை 90787 பேர் பாதிக்கப்பட்டு மொத்த சீனாவின் பாதிப்பை விட அதிகமாக உள்ளனர்.  இம்மாநிலத்தில்  3289 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவின் ஊற்றுக்கண்ணான வுகான் நகரை விட மகாராஷ்டிர மாநில தலை நகரில் கொரோன பாதிப்பு அதிகரித்துள்ளது.  இங்கு 51,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 1760 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.