கொரோனா – மும்பை தாராவி மக்களை தத்தெடுக்க அழைப்பு!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதித்துள்ள குடும்பத்தினரை, 2 மாதங்களுக்கு தத்தெடுத்து உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி உதவி கமிஷனர் கிரண் திகாவ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தராவியின் ஏழை மக்களைப் பாதுகாக்க, அவர்களில் சில குடும்பத்தினரை தத்தெடுக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார்.

அவர் கூறியதாவது, “இங்குள்ள மக்கள் மிக ஏழ்மையானவர்கள் என்பதுடன், வேலை தேடுவதற்காக அவர்கள் வெளியே வருவது வைரஸ் பரவலால் மேலும் சிக்கல்களை உருவாக்கும். இதற்கு மாற்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இரண்டு மாதங்களுக்கு தத்தெடுத்து தேவையான உதவிகளை செய்தால் அவர்கள் வெளியே வர வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு குடும்பத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துகள் என 15 நாட்களுக்கு ரூ.5000 செலவாகும். இவற்றை வழங்கினால் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவது முற்றிலும் தடுக்கப்படுவதுடன் நோய் பரவாமலும் பாதுகாக்கப்படுவர் என்றார்.