உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மும்பை ஹாஜி அலி தர்கா

மும்பை

மும்பையில் அமைந்துள்ள 552 வருடப் பழமையான ஹாஜி அலி தர்கா அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மும்பை ஒர்லி பகுதியில் ஒரு தீவு போன்ற இடத்தில் மும்பை ஹாஜி அலி தர்கா அமைந்துள்ளது.   சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த தர்காவில் ஃபிர் ஹாஜி அலிஷா புகாரியின் நினைவிடமும் ஒரு மசூதியும் அமைந்துள்ளன.  இந்த தர்கா கட்டப்பட்டு 552 வருடங்கள் ஆகின்றன.    மத ரீதியாக மட்டுமின்றி இந்த கட்டிட அமைப்பின் காரணமாகச் சுற்றுலா ரீதியாகவும் தர்கா புகழ் அடைந்துள்ளது.

உலக சாதனை புத்தகத்தில் அதிகம் பேர் வந்து செல்லும் தலங்கள் வருடா வருடம் இடம் பெறுவது வழக்கமாகும்.  வடோதராவில் உள்ள சுவாமி நாராயண் கோவில், உஜ்ஜையினியில் உள்ள மகா காலேஸ்வரர் கோவில், நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவில் போன்ற பல மத தலங்கள் ஏற்கனவே இந்த புத்தகத்தில் இடம்  பெற்றுள்ளது.

இந்நிலையில் மும்பை ஹாஜி அலி தர்கா இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.  இதற்கான சான்றிதழ் தர்காவின் தலைவர் மற்றும் நிர்வாகியான அப்துல் சத்தாரிடம் வழங்கப்பட்டுள்ளது.   இந்த தர்காவைத் தேர்வு செய்த சாதனை புத்தக தேர்வாளர் உஸ்மான் கான், “இந்த தர்கா பல விதங்களிலும் தனித்தன்மை கொண்டுள்ளது.   அனைத்து மதத்தினரும் இங்கு வருகின்றனர்.

இது ஒரு தனி தீவு போன்ற இடத்தில் அமைந்தது மட்டுமின்றி இந்திய இஸ்லாமியக் கலை வடிவத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.   இந்த தர்காவுக்குத் தினமும் சுமார் 50000 பேர் வருகின்றனர்.  வியாழன், வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் 1 லட்சம் பேர் வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.