பத்மாவதி விவகாரம் : கருத்துரிமையில்லையா? நீதிபதிகள் கண்டனம்

மும்பை

ருத்து சொல்ல இந்த நாட்டில் உரிமை இல்லையா என பத்மாவதி திரைப்படம் குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

கடந்த 2013 மற்றும் 2015ஆம் வருடம் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே என்பவர்கள் கொல்லப்பட்டனர்.  அவர்களைக் கொன்றவர்களை உடனடியாக தேடிக் கண்டுபிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் சிபிஐ மற்றும் மாநில சிஐடி துறையினர் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.  இது குறித்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பத்மாவதி இந்தி திரைப்படத்தை பற்றிய கருத்துக்களை கூறி உள்ளனர்.

நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் பாரதி டாங்கரே மேற்கூறப்பட்ட வ்ழக்கு விசாரணையின் போது, “நீதிமன்றம் உத்தரவிட்டு வருடக் கணக்கில் ஆகியும் இன்னும் உங்களால் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா?  இந்த நாட்டில் குற்றங்கள் மலிந்து விட்டன.  பாரளுமன்றத்தை தீவிர வாதிகள் ஆக்கிரமிப்பதும் ஒரு பிரதமரை அவருடைய பாதுகாவலர்களே கொலை செய்வதும் இங்கு தான் நடக்கிறது.

ஒரு இந்தித் திரைப்படத்தில் நடித்த நடிகையை கொலை செய்வேன் என மிரட்டுவதும் அவரைக் கொல்பவர்களுக்கு பரிசளிப்பேன் என்பதும் நாட்டில் வளர்ந்து வருகிறது.  இந்த நாட்டில் கருத்து சொல்ல யாருக்குமே உரிமை இல்லையா?  உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க நீங்கள் யார்?   ஒரு திரைப்படத்தை வெளியிட சில மாநிலங்கள் அனுமதிக்கவில்லை என்றால் சென்சார் போர்டு எதற்கு உள்ளது?  பண வசதியும், புகழும் கொண்டவர்களுக்கே இந்த நிலை என்றால் ஏழைகளின் கதி என்ன?

காவல் துறையால் கொலைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது நம்பும் படி இல்லை.  தற்போதுள்ள நிலையில் மிகவும் எளிதாக குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும்.  ஆனால் இது வரை கண்டு பிடிக்காமல் தேடும் பணி நடைபெறுவதாக இரு அமைப்புகளும் கூறுகின்றன.  இது எவ்வாறு முறை ஆகும்? “ என கேள்வி எழுப்பினர்.   மேலும் இந்த வழக்கை டிசம்பர் 21 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.