மும்பை: அண்டை நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளான 12 வயது சிறுமியின் 23 வார கருவை கலைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வ அனுமதியை அளித்துள்ளது.
அந்த 12 வயது சிறுமியின் தாயார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தனது அண்டைவீட்டு நபர்களால் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார் அந்த சிறுமி.
இதனையடுத்து, அவர் கர்ப்பமடைந்தார். இந்தக் கொடுமை குறித்து, காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதேசமயம், அச்சிறுமியின் கருவிற்கு 23 வாரங்கள் ஆகிவிட்டதால், 20 வாரங்களுக்கு மேற்பட்டு வளர்ந்த கருவைக் கலைக்க வேண்டுமெனில், நீதிமன்றத்தின் அனுமதி வேண்டுமென மருத்துவமனையில் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கரு மேலும் வளர அனுமதிக்கப்பட்டால், அது அச்சிறுமியின் உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரிய விளைவை உண்டாக்கும் என்றும், அக்கருவை கலைப்பதே உகந்தது என்றும் மருத்துவ வாரிய தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அதேசமயம், அந்தக் கரு உயிருடன் பிறந்து, அதைப் பராமரிப்பதற்கு, அச்சிறுமியும், அவரின் தாயாரும் விரும்பவில்லை எனில், அந்த சிசுவின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அரசு நிறுவனங்ளே பொறுப்பேற்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.